பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Tuesday, December 1, 2009

ரஜினி மகள் தயாரித்த கோவா படத்துக்கு இடைக்காலத் தடை

டிகர் ரஜினி காந்த்தின் மகள் தயாரித்துள்ள 'கோவா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்குமாறு சௌந்தர்யா ரஜினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் மணியன் என்பவர் செளந்தர்யாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், "அபிராமபுரத்தில் உள்ள ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த், 2007ம் ஆண்டு என்னை சந்தித்து கோவா படம் தயாரிப்பதற்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, எனது நிறுவனத்தின் சார்பில் அவருக்கு 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்சம் ரூபாயும், 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 60 லட்சம் ரூபாயும் கடனாகக் கொடுத்தேன்.

இந்த கடனை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திருப்பி கொடுப்பதாக அவர் எனக்கு கடனுறுதிப் பத்திரம் எழுதித் தந்தார். கோவா படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்தக் கடனை திரும்பச் செலுத்தி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.இது தவிர, என்னுடைய சொந்த பணத்திலிருந்தும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் தந்தேன். இந்த மூன்று கடனையும் அவர் எனக்கு திரும்பச் செலுத்தவில்லை. எனவே, கடனை திரும்பக் கேட்டு செளந்தர்யா ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதினேன்.இதற்கு பதில் அளித்த ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இயக்குனர் லதா ரஜினிகாந்த், இந்த பணத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் திரும்பத் தந்துவிடுவதாக கூறியிருந்தார்.ஆனால், அவர்கள் தெரிவித்திருந்தபடி பணத்தை எனக்கு திரும்பத் தரவில்லை.

இந்த நிலையில், அந்த நிறுவனம் தயாரித்த கோவா படத்தை விரைவில் வெளியிட இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.அந்த படம் வெளியானால் நான் கொடுத்த கடன் தொகையை திரும்ப வாங்க முடியாமல் போய்விடும். எனவே, ரூ.1.60 கோடி அசல் தொகையை 24 சதவிகித ஆண்டு வட்டியுடன் எனக்கு உடனடியாக திரும்பச் செலுத்த வேண்டும்.

அதுவரை கோவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ராஜசூர்யா கோவா படத்தை டிசம்பர் 11ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ரஜினி பிறந்த நாளன்று இந்தப் படம் வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.