நவாலி வயல்வெளியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையுண்டதாகக் கருதப்படும் இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. களையோடை அம்மன் ஆலயத்திற்குச் சமீபமாக பிரதான வீதியோரமாகவுள்ள வயல் வெள்ளத்தில் நாக்கு வெளியே தள்ளிய நிலையில் சடலம் காணப்பட்டதாக அப்பகுதிக்குச் சென்ற விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.
மஞ்சள், சிவப்பு நிற பஞ்சாபி உடை அணிந்து கையில் கௌரி காப்பு நூலும் கட்டியிருந்த அப்பெண் சுமார் 30 வயது மதிக்கத் தக்கவர் என்று கூறப்பட்டது.
நெற்றியிலும் முகத்திலும் கடியுண்ட காயங்களும் காணப்பட்டன என்றும், காதிலிருந்து தோடுகள் அறுத்தெடுக்கப்பட்ட அடையாளங்கள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அங்கு திரண்டு நின்ற மக்கள் எவரும் சடலத்தை அடையாளம் காட்டவில்லை.
அந்தப்பெண் வேறிடத்தில் கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் அப்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் கருதுகின்றனர். சம்பவ இடத்தில் மல்லாகம் பதில் நீதிவான் என்.
தம்பிமுத்து மரண விசாரணை நடத்தியதை அடுத்து பெண்ணின் சடலம் யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.