பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Tuesday, December 1, 2009

டாடா சாம்ராஜ்யம்... அடுத்த வாரிசு யார்?

டாடா குழுமம்... பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியா வுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல.
இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலையை துவங்கியது டாடா நிறுவனம்தான். இந்தியாவில் விமான சேவையை ஆரம்பித்ததும் டாடாவே. இதுமட்டுமல்ல... தொழில் துறையில், 'முதல் முதலாக' என்று பல விஷயங்களைச் செய்த பெருமை மிக்க நிறுவனம் டாடா குழுமம்.71 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று டாடா.

இன்றும் டிசிஸ், டாடா நானோ என தொழில் துறையைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த டாடா குழுமத்துக்கு சேர்மனாக இருப்பவர் ரத்தன் டாடா. 1868-ல் ஜாம்ஷெட்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், வழிவழியாக அவரது குடும்ப வாரிசுகள் தலைமையில் இயங்கி வருகிறது. இன்று 114 நிறுவனங்கள் டாடா குழுமத்துக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றில் 27 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜேஆர்டி காலத்தில் டாடா குழுமம் மிகப் பெரிய விரிவாக்கத்தைச் சந்தித்தது. ஏர் இந்தியா நிறுவனம் துவங்கப்பட்டது இவர் கால்ததில்தான். பின்னர் மத்திய அரசு இந்த நிறுவனத்தை நாட்டுடைமையாக்கியது.1991 முதல் ரத்தன் டாடா தலைவராக உள்ளார்.இவர் காலத்தில்தான் டாடா சாம்ராஜ்யம் 85 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானத்தில் 65 சதமவிகிதம் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே வருகிறது.இந்நிலையில் ரத்தன் டாடா வரும் 2012-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். அப்போது அவருக்கு 75 வயது பூர்த்தியாகிறது.

எனவே தனக்கு அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் ரத்தன் டாடா. ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. எனவே அவருக்கு வாரிசுகள் கிடையாது. இதனால் ரத்தன் டாடாவின் அடுத்த வாரிசு யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.டாடா குழு தலைவர் பதவி என்பது சாதாரண விஷயமல்ல... மிகவும் பொறுப்பு மிக்கதாவும், சர்வதேச அளவில் மதிப்பு கொண்டதாகவும் இருப்பதால் சரியான நபரின் கையில் இதை ஒப்படைக்க வேண்டும் என்ற கவலை பிறந்துள்ளது டாடாவுக்கு.

இப்போதைக்கு அவர் முன் எந்த சாய்ஸுமில்லை... பெப்ஸிகோவின் இந்திரா நூயி, சிட்டி குழுமத்தின் விக்ரம் பண்டிட் மற்றும் டாடா குடும்பப் பெயரைத் தாங்கி நிற்கும் நோயல் டாடா போன்றவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. இவர்களைத் தவிர, டாடா குழுமத்தில் இப்போதுள்ள ரவிகாந்த், கோபால கிருஷ்ணன் போன்றோர் பெயர்களும் அடிபடுகின்றன.ஆனால் ரத்தன் டாடா மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.டாடா குழுமத்துக்கு பொருத்தமான தலைவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க, உலகின் டாப் மேன்பவர் நிறுவனங்களை அணுகியுள்ளார் டாடா. அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தகுதிவாய்ந்த தலைவர் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவார் என டாடா குழும அதிகாரி ஒருவர் தெரிவித்தார். என்ன நினைக்கிறார் டாடா?

ரத்தன் டாடா இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றபோது, நிலைமை அவரது கட்டுக்குள் இல்லை. டாடாவின் துணை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரிகளை தனக்குக் கீழ் கொண்டு வருவது அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆரம்ப வருடங்களை இந்த உள் விவகாரத்திலேயே செலவழிக்க வேண்டி இருந்தது, ரத்தன் டாடாவுக்கு. இந்த முறையும் அந்த மாதிரி சூழல் உருவாகக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் ரத்தன் டாடா.

இன்று நிறுவனம் முழுமையாக அவர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த கட்டமைப்பை அப்படியே கைமாற்ற வேண்டும் என்பது அவர் ஆசை. வெளிநாட்டவரும் தலைவராகும் வாய்ப்பு...இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த டாடா, "டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் நிறுவனத்துக்கு உள்ளும் இருக்கலாம்... வெளியிலும் இருக்கலாம். அதேபோல, அவர் ஒரு இந்தியராக இருந்தால் தேர்வு செய்ய எளிதாக இருக்கும்.

அதே நேரம், இந்த தலைமைப் பதவியில் ஒரு வெளிநாட்டவரும் அமர வாய்ப்பிருக்கிறது (“It would certainly be easier if that candidate were an Indian national. It could also be an expatriate sitting in that position," ). ஆனால், இந்த நிறுவனத்தின் பெருமை, தேசத்தின் மதிப்பு, ஒற்றுமைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவராக அவர் இருக்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை" என்றார். யாருக்கு இந்த டாடா சாம்ராஜ்ய அரியாசனம் கிடைக்கப் போகிறது என்பதை இந்தியர்கள் மட்டுமல்ல... கார்ப்பரேட் உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!.