அச் சமயம் அவர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது எதிர்க்கட்சியினரின் கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளின் கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களை கூறியிருந்தார்.நாட்டின் பொருளாதாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பதை அச் சமயம் அவர் ஏற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சி தசாப்தங்களுக்கு முன் கடைப்பிடித்து வந்த திறந்து பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும், தான் ஜனாதிபதியாக தெரிவானால் அதனையே கடைப்பிடிக்கப் போவதாகவும் கூறினார். கூட்டணியின் பங்காளி கட்சியான மக்கள் விடுதலை முன்னணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த பொருளாதார கொள்கையை முழுமையாக எதிர்த்து வருவது பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
பொன்சேகாவின் இவ்வாறான கொள்கையை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக் கொள்ளுமா என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவ்வாறான கொள்கை உள்ளூர் கைத்தொழில்களை பாதிப்பதுடன், அரச துறையில் வேலை வாய்ப்புகளையும் குறைத்து, தனியார்மயப்படுத்தலை ஊக்குவிப்பதுடன் எரிபொருள் விலைகளையும் அதிகரித்துவிடும் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.மக்கள் விரும்பினால் மனத்திருப்திக்காக மதுபானம் அருந்தும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜெனரல் பொன்சேகா மற்றொரு தவறான விடயத்தையும் அங்கு குறிப்பிட்டார்.
இதன் மூலம் நாட்டில் குடிகாரர்கள் பெருமளவில் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம்.அத்துடன் தனது தேர்தல் பிரசாரத்துக்காக புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பெற்றோர்களிடமிருந்தும், புலிகள் ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி உதவியை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக அவர் அங்கு கூறியிருந்தது மிகவும் மோசமான ஒரு கூற்றாக அமைந்தது.நாட்டின் ஸ்திரத்தை ஒழிக்கும் வெளிநாட்டிலுள்ள புலிகளின் சதி வேலையின் ஒரு பகுதியாக ஜெனரலின் இந்த கூற்று அமைந்திருப்பதாக பொது மக்கள் கோபாவேசத்துடன் இருக்கின்றனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமென ஜெனரல் அங்கு அழுத்தமாக கூறினார். முன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற தூரத்துக்கனவை, செய்ய முடியாத ஒன்றைப் பற்றி பேசுவதற்கு முன் அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதை பற்றி சிந்திக்க வேண்டும் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.அதேவேளை யுத்த முனையில் தான் பதவி வகித்தபோது பல தவறுகளை செய்ததாக ஜெனரல் மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் ஒப்புக் கொண்டார்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். இதனால் தடுமாற்றம் அடைந்த ஜெனரல் பொன்சேகா அக்கேள்விகளில் பலவற்றுக்கு பதிலளிக்கும் அரசியல் அனுபவம் தனக்கு இல்லை என்று கூறியதுடன் முடிந்த வரை குறைந்த அளவு கேள்விகளையே தன்னிடம் கேட்குமாறு ஊடகவியலாளர்க ளிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.