பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 5, 2009

வி.பு சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்ச்சி தோல்வி

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமிருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை அரச உடமையாக்க அனுமதி வழங்குமாறு சர்வதேச இணக்கச் சபையிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கே.பி.யிடமிருக்கும் சகல சொத்துக்களும் அவரது உண்மையான தகவலின் அடிப்படையில் இல்லாமை மற்றும் இந்தப் பணம் வியாபார நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் என்பதால் அது ஒருநாட்டிற்குரிய சொத்து எனத் தீர்மானிப்பது சிரமம் என்பதாலேயே இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இதற்கு முன்னர் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருக்கும் கே.பி.க்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ள அந்த வங்கியிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கே.பி.யின் பெயரில் எவ்வித வங்கிக் கணக்கும் சுவிஸ் வங்கியிடம் இல்லையெனவும் அவர்கள் அந்தப் பணத்தை வேறு பெயர்களில் வைப்பிலிட்டிருக்கலாம் எனவும் சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த சொத்துக்களுக்குரிய ஆவணங்கள் அமெரிக்காவில் பெட்டகமொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமானால் தன்னை விடுவிக்க வேண்டுமென கே.பி. தெரிவித்திருப்பதாகவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கே.பி.க்குரிய சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.
கே.பி.யிடம் 600 வங்கிக் கணக்குகளும் 5 கப்பல்கள் இருப்பதாகவும் இவற்றில் மூன்று கப்பல்கள் விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருந்தார். இந்த நிலையில் அந்தக் கப்பல்களை இலங்கைக்குக் கொண்டுவர தடையில்லை எனவும் அவற்றின் உரிமையைப் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு முடியாது எனவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் அந்தக் கப்பல்களைக் கொண்டுவந்து ஏதேனும் நஸ்டங்கள் ஏற்பட்டால், அந்தக் கப்பல்கள் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு செலுத்த நேரிடும் என சர்வதேச சட்டவல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.